எறிபத்த நாயனார் தினம்- 11-3-2020

மும்பை ராமகிருஷ்ணன்

திருவாரூரில் திருவாசிரிய மண்டபத்தில், சிவபெருமான் சுந்தரருக்கு "தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்று அடியெடுத்துக்கொடுக்க- சுந்தரர் தொடர்ந்து, தன் காலத்துக்குமுன் வாழ்ந்த சிவபக்தர்கள், சிவத்தொண்டர்கள் பற்றிப் பாடினார். அதற்கு "திருத்தொண்டத் தொகை' என்று பெயர்.

Advertisment

அதனையொட்டியே தில்லையில் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகரின் பிரதிமங்களை நிறுத்தி, நமக்கு தேவாரம் கிடைக்கச் செய்தார்- நம்பியாண்டார்நம்பி.

அவரே சுந்தரரின் "திருத் தொண்டத்தொகை'யை "திருத்தொண்டர் திருவந்தாதி' என ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் எனப் பாடினார். இதன்மூலமே, அமைச்சராகவிருந்த சேக்கிழார், "திருத்தொண்டர் புராணம்' என ஒவ்வொரு நாயன்மாரின் வரலாறையும் விரிவாகப் பாடினார். சிவனடியார் பெருமையே சிவன் பெருமையைவிட உயர்ந்தது என உணர்த்திய அந்த நூலே "பெரியபுராணம்'.

சிவபெருமானே "உலகெலாம்' என்று அடியெடுத்துக்கொடுக்க, "உலகெலாம்' என்றே முடித்தார். அது சைவத்திருமுறைகளில் 12-ஆவதாக விளங்குகிறது. இந்நூல் "உபமன்யு பக்த விலாசம்' என்று வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Advertisment

மாசி மாத ஹஸ்த நட்சத்திர நாளே "எறிபத்த நாயனார்' தினம். எனவே அவரைப் பற்றி சிறிது சிந்திப்போமா... இவரது வரலாறு பெரிய புராணத்தில் 551 முதல் 603 வரையிலான பாக்களில் கூறப் பட்டுள்ளது.

63 நாயன்மார்களில் குலம் குறிக்கப் படாத ஆறுபேரில் எறிபத்தரும் ஒருவர். இவரது காலம் கி.பி. 600-க்கும் முந்தையது. சம்பந்தர், அப்பர், சுந்தரருக்கும் முற்பட்டவர்.

பிறந்த ஊரோ, தாய்- தந்தையரோ தெரியவில்லை. கொங்கு நாட்டிலுள்ள கருவூர் (தற்போது கரூர்) சம்பந்தரால் ஒரு பதிகம் பாடப்பட்ட தலம். "ஆம்பிராவதி' நதிக்கரையில் உள்ளது. சிவன்- பசுபதீஸ்வரர்; அம்பாள்- கிருபா நாயகி. இத்தல சிவனை காமதேனு பணிந்து, படைக்கும் தொழில்புரிய வரம் பெற்றது. சிவலிங்கம் சற்று வலப்புறம் சாய்ந்துள்ளது. தலப்பெயர் "ஆனிலை' என்றும் உண்டு. "திருவிசைப்பா' பாடிய கருவூர்த் தேவர் பேறுபெற்ற தலம்.

அவர் சமாதிக்கோவில் தென்பாகச் சுற்றில் உள்ளது.

Advertisment

kk

சம்பந்தரின் இரு பதிகங்கள் சிந்திப்போமா...

"பண்ணினார் படியேற்றர் நிற்றர்மெய்ப்

பெண்ணினார் இறைதாங்கு நெற்றியர்

கண்ணினார் கருவூருள் ஆனிலை

தண்ணினார் நமையாளு நாதரே.'

"தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு

உண்ட ஆருயிர் ஆய தன்மையர்

கண்டனார் கருவூருள் ஆன்நிலை

அண்டனார் அருள்ஈயும் அன்பரே.'

பெரியாழ்வார் வில்லிபுத்தூரில் ஒரு தோட்டம் அமைத்து, மலர்கள் தரும் கெடி, கொடி, மரங்கள் வளர்த்து பூஜைக்கும், அணிவதற்கும் மாலை செய்யும் திருமால் தொண்டைப் புரிந்தார்.

அதேபோன்று கரூரில் தோட்டம் அமைத்து செடி, கொடி, மரங்கள் வளர்த்து பூமாலை செய்துவரும் தொண்டைச் செய்தவர் சிவகாமி யாண்டார் என்ற பசுபதி சிவபக்தர். அவ்வூரிலேயே வளர்ந்தவர் எறிபத்தர்.

அவருக்கு சிவனைவிட சிவனடியார்கள்மீது அதிக பக்தி. யாராவது சிவனடியார்களை சீண்டுவதைக் கண்டால், தன் கையிலுள்ள "மழு' ஆயுதத்தால் அவரைத் துன்புறுத்துவார். முருகன் பழமுதிர்ச்சோலையில் ஔவை யாரிடம், "எது பெரியது' என கேட்க, கடைசியில் "தொண்டர்தம் பெருமை பெரியது' என்றார். அந்த நல்குணம் பெற்றவர் எறிபத்தர்.

புகழ்சோழன் என்னும் மன்னன் அப் பகுதியை ஆண்டுவந்த காலம். அன்று அஷ்டமி திதி. மறுநாள் நவமியன்று ஊரில் ஒரு திருவிழா நடக்கவிருந்தது. சிவகாமியாண்டார் வழக்கம்போல் நீராடி, திருநீறிட்டு, வாயைத் துணியால் கட்டிக்கொண்டு (மலர்கள்மீது எச்சில் படக்கூடாதென்று) மலர் பறித்து மாலைகட்டிக் கூடையில் வைத்துக்கொண்டு கோவிலை நோக்கிச் சென்றார்.

மறுநாள் விழாவை முன்னிட்டு, அரசனது பட்டத்து யானை நதியில் ஆனந்தமாக நீராடிக் கொண்டிருந்தது. திடீரென அதற்கு "மதம்' பிடித்துவிட்டது. பாகர்களால் அதனைக் கட்டுப்படுத்த இயலவில்லை. மதம்பிடித்த யானை சிவகாமியாண்டாரைத் தள்ளியது. கீழே விழுந்த பூக்கூடையைக் காலால் மிதித்து நசுக்கியது. எழுந்து யானையைத் தன் தடியால் அடிக்க முயன்றார். தள்ளாமை காரணமாக கீழே விழுந்தார். சிவனுக்காகப் பறித்த பூக்கள், தொடுத்த மாலை வீண்போயிற்றே- சிவத்தொண்டு நின்றதே என்று கலங்கியழுதார்; புலம்பினார்; தெருவில் புரண்டார்.

அச்சமயம் ஏதேச்சையாக அங்குவந்த எறிபத்தர், சிவகாமியாண்டாரிடம் "என்ன நடந்தது' என்று வினவ, அவர் நடந்ததைக் கூறினார். "யானை எந்தப் பக்கம் சென்றது?' என வினவ, சிவகாமியாண்டவர் திசை காட்டினார்.

சிவத்தொண்டனுக்குத் துன்பமா என்று வெறிபிடித்தவர்போல், யானை சென்ற பாதையில் வேகமாகச் சென்று, யானையைத் தன் மழுவால் அடித்து தும்பிக்கையை வெட்டினார். யானை பிளிறிக் கீழே விழுந்தது; இறந்தது. யானைப் பாகர்களும் கீழேவிழ, "யானையைக் கட்டுப்படுத்தாத நீங்களும் மடிய வேண்டும்' என்று மழுவால் அவர்களை கோபத்துடன் தாக்க, அவர்களும் மடிந்தனர்.

அரசனுக்கு இந்த விவரம் தெரிவிக்கப் பட்டது. யாரோ எதிரி செய்த செயலென் றெண்ணி கோபம்கொண்ட அரசன், உடனே தன் படைவீரர்களுடன் அவ்விடம் வந்தான்.

அரசனும் ஆழ்ந்த சிவபக்தன். சிவகாமியாண்ட வர், எறிபத்தர் இருவரிடமும் அன்பு கொண்ட வன். இச்செயலைச் செய்தது எறிபத்தர் என்பதையறிந்த மன்னன் வியந்தான்.

அரசனின் நற்குணமறிந்த எறிபத்தர் நடந்த விவரம்கூறி, யானை, பாகர்களைக் கொன்றதற்குப் பரிகாரமாகத் தன் மழுவை அரசனிடம் தந்து தன்னைக் கொல்லுமாறு வேண்டினார்.

ஆனால் சோழ மன்னனோ, ""சிவபக்தரான உம்மால் யானையும் பாகர்களும் இறந்தனர் என்பதையறியாமல் உம்மை தண்டிக்க வந்தேன். எனவே நானே குற்றவாளி'' என்று சொல்லி, தன்னை வெட்டுமாறு வாளை நீட்டினான்.

எறிபத்தரோ, ""யானையும் பாகர்களும் என்னால் கொல்லப்பட்டதால் நானே குற்றவாளி'' என்றார். அரசனோ, ""யானையும் பாகர்களும் என்னுடையவர்கள் என்பதால் நானே குற்றவாளி'' என்று கத்தியை நீட்டினான்.

விநோதம்தானே!

அச்சமயம் பசுபதீஸ்வரர் காட்சிதந்து, ""உங்கள் மூவரின் சிவத்தொண்டு, சிவபக்தர் தொண்டை உலகுக்கு உணர்த்தவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம்'' என்றருளினார். உடனே யானையும் பாகர்களும் உயிர்பெற்றனர், சிவகாமியாண்டாரும் நலமுற்று எழுந்தார். சிவதரிசனத்தால் எறிபத்த நாயனார் நெகிழ்ந்தார். பின்னர் மாசி மாத ஹஸ்த நட்சத்திர நாளில் சிவனடி சேர்ந்தார். பக்தர்களின் பெருமை கூறும் சுந்தரரின் திருத்தொண்டத் தொகையுடன் நிறைவு செய்வோம்.

"பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

எப்போதும் திருமேனி தீண்டுவார்க்கடியேன்

முழுநீறு பூசிய முனிவர்க்குமடியேன்

அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.'